தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- ஜனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப் பட்டார்.

பிறப்பு

தேவநேயர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞான முத்தனார் என்னும் கணக்காயருக்கும், அவர் இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசு (Stokes) அவர்களை கிறிஸ்தவ மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி, திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார்.

இறுதி நாட்கள்

மதுரையில் ஒரு கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் அவருக்கு மார்புவலி ஏற்பட்டது. 1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு தேவநேயர் உயிர்நீத்தார்.

வாழ்க்கைவரைவு

தேவநேயரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் என்னும் தலைப்பில் இரா. இளங்குமரன் நூல்வடிவில் எழுதியுள்ளார். இந்நூல் 2000ல் வெளிவந்தது. தேவநேயப் பாவாணரின் மகன் தே. மணி தம் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் நினைவலைகள் என்னும் தலைப்பில் 2006ல் ஒரு நூலாக எழுதியுள்ளார்.

தேவநேயர் ஆக்கிய நூல்கள்

  1. இசைத்தமிழ் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
  2. இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
  3. உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்
  4. உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்
  5. ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்
  6. கட்டாய இந்திக் கல்வி கண்டனம் (1937) இசைப்பாடல்கள் 35 கொண்டது. பக்கங்கள் 33
  7. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1968) 89 பக்கங்கள்
  8. கட்டுரை கசடறை என்னும் வியாச விளக்கம் (1937) 84 பக்கங்கள்
  9. கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952) 160 பக்கங்கள்
 10. கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள், 50 இசைப்பாக்கள் கொண்டது
 11. சிறுவர் பாடல் திரட்டு (1925) கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது
 12. சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943) 104 பக்கங்கள்
 13. சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961) 46 பக்கங்கள்
 14. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 120 பக்கங்கள்
 15. தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்
 16. தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954) 144 பக்கங்கள்
 17. தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்
 18. தமிழர் திருமணம் (1956) 96 பக்கங்கள்
 19. தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்
 20. தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள்
 21. தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
 22. திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள். முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது.
 23. திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது.
 24. தொல்காப்பியக் குறிப்புரை (1944) (நிறைவு பெறாத நூல்)
 25. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) 240 பக்கங்கள்
 26. பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள.
 27. மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978) 250 பக்கங்கள்
 28. முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள். குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
 29. வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது.
 30. வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968) 122 பக்கங்கள்.
 31. வேற்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்.
 32. The Primary Classical Language of the World (1966) 312 பக்கங்கள்
 33. The Lemurian Language and its Ramifications (1984) 400 பக்கங்கள் (வெளியீடு தெரியவில்லை)
 34. இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள. 31 பக்கங்கள்.
 35. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா. கு.பூங்காவனம். பக்கங்கள்??
 36. கட்டுரை எழுதுவது எப்படி? 36 பக்கங்கள்
 37. கடிதம் எழுதுவது எப்படி? (1984) 36 பக்கங்கள்
 38. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்.
 39. பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களை தொகுப்பசிரியர் இரா. இளங்குமரன் தொகுத்து.
 40. பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது. தொகுப்பு. இரா. இளங்குமரன்.